search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பாராட்டு"

    தாராபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆலம். இவரது மனைவி ரூபினா (வயது 22). ஆலம் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி பூலாம்பட்டியில் உள்ள மரிச்செலம்பு என்ற கிராமத்தில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    ரூபினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வார். இன்று காலை ரூபினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இன்று காலை தொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் ஏறினார். பஸ் ஏறிய சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு பிரசவ வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டு துடித்தார்.

    இதனை அறிந்த சக பயணிகள் இது குறித்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தெரியப்படுத்தினர். உஷாரான அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் போதிய அவகாசம் இல்லை. இதனால் பஸ்சை மற்ற நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் வழியில் உள்ள தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வேகமாக ஓட்டிச்சென்றனர். இது குறித்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே கர்ப்பிணிக்கு மேலும் வலி அதிகமானது. சக பெண் பயணிகள் ரூபினாவை சூழ்ந்து கொண்டனர். ஆண் பயணிகள் ஒதுங்கி வழிவிட்டனர். குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தது.

    மின்னல் வேகத்தில் பஸ் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த டாக்டர் குழுவினர் கர்ப்பிணியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    பட்டுக்கோட்டை அருகே ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். #OldWoman #Youngsters
    பட்டுக்கோட்டை:

    பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த ‘நண்பன்“ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் உயிருக்கு போராடும் ஜீவாவின் தந்தையை விஜய் ஸ்கூட்டரில் உட்கார வைத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

    இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோவில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்த விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசிவிசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு (வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார்.

    படிக்கட்டுகள் வழியாக குளத்திற்குள் இறங்கி அங்குள்ள படிக்கட்டில் நின்று கொண்டு அந்த மூதாட்டி கை, கால்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார்.

    நீண்ட நேரம் குப்புற கிடந்த அந்த மூதாட்டியை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் குளத்திற்குள் இறங்கி அவரை மீட்டு வந்து குளத்தின் கரையில் போட்டனர். அவர் இறந்து விட்டார் என்று திகைத்து நின்றபோது மூதாட்டியின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 23), ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்தனர். ஆனால் யாரும் அந்த மூதாட்டியை ஏற்றிச்செல்ல வரவில்லை.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒரு கணம் திகைத்தனர். ஆனால் மறுகணமே சுதாரித்துக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மற்றொருவர் அந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.

    உடனே மோட்டார் சைக்கிளை இயக்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் அந்த மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சரியான நேரத்தில் சேர்த்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார்.

    உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றதால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்கு காரணமாக இருந்த அந்த இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.  #OldWoman #Youngsters
    உசிலம்பட்டி அருகே ரோட்டில் கிடந்த ரூ.10 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரியபாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமன்.

    இவர் சம்பவத்தன்று கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்ஸ் மாயமானது. அதில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் மணிபர்ஸ் கிடைக்கவில்லை. இது குறித்து உசிலம்பட்டி டிவுன் போலீசில் பரமன் புகார் செய்திருந்தார்.

    கீழப்புதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அபிஷேக் (வயது 5). முதல் வகுப்பு படித்து வரும் இவன் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு ஒரு மணிபர்ஸ் கிடந்ததை பார்த்த அபிஷேக் அதை எடுத்து தனது தந்தையிடம் ஒப்படைத்தான். பர்சில் ரூ. 10 ஆயிரம் இருந்ததை பார்த்த செல்வம் போலீஸ் நிலையத்தில் ஏதேனும் மணிபர்ஸ் தொலைந்த வழக்குகள் பதிவாகியிருக்கிறதா? என விசாரித்தார்.

    அப்போது பரமன் மணிபர்ஸ் தொலைந்தது தொடர்பாக புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வரவழைத்து விசாரணை நடத்தியதில் சிறுவன் அபிஷேக் கண்டெடுத்த மணிபர்ஸ் பரமனுடையது என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணம் மற்றும் மணிபர்ஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ரோட்டில் கிடந்த மணிபர்சை தந்தையிடம் கொடுத்து உரியவரிடம் சேர்க்க உதவிய சிறுவன் அபிஷேக்கை போலீஸ் உயர் அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் பாராட்டி வாழ்த்தினர். #tamilnews
    வேப்பனஹள்ளி பகுதியில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை அந்த பகுதி பொதுமக்கள் மக்கள் பாராட்டினார்கள்.
    வேப்பன ஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனபள்ளி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராம பகுதியில் உத்தனபள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு தலைமையில் உத்தனபள்ளி சுற்று வட்டார கிராமங்களில் பல்வேறு சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தொடர் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வேகத்தடை அமைத்தல் போன்ற சேவைகளை போலீசார் செய்து வருகின்றனர். போலீஸ் நிலையம் சுற்று சுவர் அமைத்தல் மற்றும் தற்போது உத்ததனபள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் இல்லாமல் வீதிகளில் சென்று தேங்கிய நிலையில் இருந்தது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்பட்டது. அந்த கழிவு நீர் கால்வாயை போலீசாரின் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
    இண்டூர் அருகே விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கலெக்டர் மலர்விழியின் மனிதாபிமானத்தை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஆதனூரைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அந்த நேரத்தில் பென்னாகரத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு கலெக்டர் மலர்விழி காரில் தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    இந்த விபத்தை நேரில் பார்த்த கலெக்டர் காரை நிறுத்தி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். 

    108 ஆம்புலன்சில் காயம் அடைந்த இருவரையும் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கலெக்டரின் இந்த மனிதாபிமான உதவியை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    அவினாசி அருகே ரோட்டில் கிடந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் பாராட்டினார்கள்.
    அவினாசி:

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனியப்பன் (33), முருகேசன் (23). இவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் 2 பேரும் தினசரி வசூல் பணிக்காக மோட்டார் சைக்கிளில் அவினாசியில் இருந்து கருவலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரோட்டில் ஒரு பை கிடந்தது.

    அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்தை எடுத்த அவர்கள் அவினாசி போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் பணத்தை தவற விட்ட கருவலூரை சேர்ந்த தோல் வியாபாரி ரங்கராஜன் (55) என்பவர் உரிய அடையாளம் கூறி டி.எஸ்.பி. பரமசாமி முன்னிலையில் பணத்தை பெற்று கொண்டார்.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, வியாபாரம் தொடர்பாக துரைசாமி என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி வந்தேன். அந்த பணத்தை பனியனுக்குள் போட்டு கொண்டு கோவில்பாளையம் ரோட்டில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அப்போது பணம் தவறி விழுந்துள்ளது.

    வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் தான் அவினாசி போலீசில் பணம் ஒப்படைக்கப்பட்ட தகவல் கிடைத்து இங்கு வந்து பணத்தை பெற்று கொண்டேன் என்றார்.

    ரோட்டில் கிடந்த பணத்தை நேர்மையுடன் எடுத்து போலீசில் ஒப்படைத்த பழனியப்பன், முருகேசன் ஆகியோரை போலீசார் பாராட்டினர். அவர்களுக்கு போலீஸ் சார்பில் பாராட்டு சான்று வழங்க ஏற்பாடு செய்யப்படும் என டி.எஸ்.பி கூறினார்.

    பணத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த முருகேசன் கூறியதாவது-

    குடும்ப சூழல் காரணமாக நீண்ட தூரத்தில் இருந்து அவினாசியில் தங்கி வேலை பார்க்கிறோம். வழக்கமாக செல்லும் வழியில் துணிப்பை ரோட்டில் கிடந்தது.

    இதனை எடுத்து பார்த்ததில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அருகில் விசாரித்தோம். யாரும் இந்த பணத்திற்கு உரிமை கொண்டாடவில்லை. அதன் பின்னர் அவினாசி போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பணத்தை போலீசில் ஒப்படைத்த பழனியப்பன், முருகேசன் ஆகியோருக்கு அவினாசி மற்றும் கருவலூரை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
    ராமேசுவரத்தில் மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய திமுக பிரமுகரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜான்பாய் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தர் நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    அதன் பேரில் ஜான்பாய் தனது குடும்பத்திற்கு சொந்தமான ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட செம்மடம் பகுதியில் 18 செண்ட் நிலப்பரப்பை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

    மனநல காப்பத்திற்கு நிலத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நடைபெற்றது.

    ராமேசுவரம் ராம்கோ பொறுப்பாளார் வேடராஜன் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் குடில் பிரணவானந்தர் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜா மணி முன்னிலை வகித்தார்.

    ஜான்பாய், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் மனோலயா நிர்வாக இயக்குனர் மணி கண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்து மனநல காப்பகத்தில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், மனோலயா முத்துராமன், முருகபூபதி, சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், வழக்கறிஞர் ராஜசேகர், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவர் நம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கோடைகாலத்தை முன்னிட்டு அரசு பஸ் பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிநீர் வழங்கும் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் பஸ்களின் பயணம் செய்யும் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் ஒரு அரசு பஸ்சில் தினமும் பயணிகளுக்கு டிரைவர் -கண்டக்டர் குடிநீர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த மனித நேயம் பொதுமக்களின் அமோக பாராட்டை பெற்று உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செங்கிப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 20 லிட்டர் குடிநீர் கேன் வைத்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். தினமும் தங்கள் சொந்த செலவில் டிரைவரும்- கண்டக்டரும் அதனை வழங்கி வருகின்றனர். அரசு செய்யாத இந்த பணியை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டிருப்பது அனைவருக்கும் முன் உதாரணமான செயலாக கருதப்படுகிறது. இதுபோல் மற்ற அரசு பஸ்களிலும் கோடை காலத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக கண்டக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, கோடை தாகத்துக்காக நாங்கள் பாட்டிலில் கொண்டு வரும் குடிநீரை சில பயணிகள் வாங்கி குடிப்பார்கள் அப்போது எங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் ஒரு முறை பயணம் செல்ல 1 மணி நேரத்துக்கு மேலாகும் போது பல பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி படுவதை கண்டோம்.

    இதைத்தொடர்ந்து குடிநீர் கேன் கொண்டு செல்ல உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று குடிநீர் வழங்கி வருகிறோம். இந்த சின்ன உதவி எங்களுக்கு பெரிய மன நிறைவை தருகிறது என்றார்.

    ×